வெம்மை
கண்ணீர் வற்றிய
என் கூர்விழி நுனிகளில்
வெதும்பி வழியும்
வெறுமையின் விசையில்
என் நெடுமூச்சு புயலாக
வறண்ட மனம் மணலாக
இங்கே
புலர்ந்து படர்கிறது பாலை.
என் வல்லமைக் கனவை
அழலில் இருத்தி
இறகை முறித்த
எலும்பிலா வஞ்சங்கள்
உயிர்த்து உலவி
உறைந்துப் பெருகும்
இழிவுகள் மலிந்த
உன் கொடுந்தலை கொய்தே
என் பூசனை ஆற்றிட
ஆற்றல்கள் கூட்டிட
அருந்தவம் கனிந்து
அக அலை எழுந்திட
அக அலை எழுந்திட
எரிதழல் கூந்தல்
திசைதோறும் தகிக்க
நாடுகள் காடுகள் வையங்கள் மீறி
வானங்கள் வளைந்து
பறையிசை பயில
பெருஞ்சின நடனத்தில்
பெருவெளி தெறிக்க
பரவிடும் எமை நீ
கொடுஞ்சினக் கொற்றவை என்றே அறிக.
Excellent!
ReplyDelete