Posts

Showing posts from November, 2022

பழையோள் கூத்து

Image
Photo by KaLyaN KoLusu: https://www.pexels.com/photo/kali-maa-goddess-statue-6435471/ சீற்றமொரு இழை சீர்நேசக் குழைவொரு இழை எனப் பிணைந்தச் செல்வி  கொல்தொழில் தெய்வம் வேட்டுவ வரிசுட்டும் மிளிர்வண்ண வீரக்கொடி   விடைத்த வலிய தோளை நினைவிலேந்தி ஆடும் மகட்கு சீவம் துலங்க   வெளிநின்ற தெற்றுப்பல் விளங்க நகைத்து வைப்பாள்  அஞ்சாமை புகட்டும் நெடுமகளின் விரல் உகிர்நுனிகள் சீலக்கோடுகள் விரிதலைக் கோலம் வரம்பறுந்த வல்லமையின் வளர்நிழல் மறைதோன்றும் முன்னின்ற ஐந்திணைத் தலைவி  தொல்குடிகள் புரந்த முகில்வண்ணப் பழையோள்  ஏற்று ஒருமித்து  ஏற்றும் ஆர்ந்த அன்பரிடைப்  பெருகும் விழிநீர்திரண்டு நீளமாய் நெகிழ்ந்தோட  அடர் மனக்குகைப் பிளந்து வெளிப்படும் எல்லையிற்   கலைமான்கள் சூழப் புனலாடும் காரிகை    படரும் எண்மறந்த எண்ணக் குப்பைக்  கொளுத்திக் குளிர்காய்ந்து அலரும் கானமர் செல்வியவள்       அதிரக் கிளம்பி விசும்பு தொட புவியும் பொறியும் உறைய திக்கெட்டும் பறையறைய    அகண்டு ஆடும் ஊழிக்கூத்தை  அன்னை அன்னை ஆடும் கூத்தை  நாடச்செய்தாய் என்னை.