Posts

Showing posts from 2017

வெம்மை

Image
கண்ணீர் வற்றிய என் கூர்விழி நுனிகளில் வெதும்பி வழியும்   வெறுமையின் விசையில் என் நெடுமூச்சு புயலாக  வறண்ட மனம் மணலாக  இங்கே  புலர்ந்து படர்கிறது பாலை. என் வல்லமைக் கனவை   அழலில் இருத்தி  இறகை முறித்த  எலும்பிலா வஞ்சங்கள்  உயிர்த்து உலவி  உறைந்துப் பெருகும் இழிவுகள் மலிந்த   உன் கொடுந்தலை கொய்தே  என் பூசனை ஆற்றிட  ஆற்றல்கள் கூட்டிட   அருந்தவம் கனிந்து அக அலை எழுந்திட   எரிதழல் கூந்தல்  திசைதோறும் தகிக்க   நாடுகள் காடுகள் வையங்கள் மீறி  வானங்கள் வளைந்து  பறையிசை பயில   பெருஞ்சின நடனத்தில்   பெருவெளி தெறிக்க  பரவிடும் எமை நீ   கொடுஞ்சினக் கொற்றவை என்றே அறிக.

ஊழிக்காலக் கூத்திற்கான ஒரு ரகசிய ஒத்திகை

Image
" அன்பே அறம் ; அதுவே சிவம் " என்ற ரீதியிலான சாத்வீகத் தளைகளை தளர்த்தி ,  அரிதாரங்கள் தவிர்த்து , யதார்த்தத்தை தேடும் பொழுதுகளில் தென்படுகிறது வாழ்வின் பல கடந்து வராத தூரங்களையும் . அன்பெனும் வேள்வி , பெண்ணாக பிறந்தவளிடம் மகத்தான பலிகளை கேட்பதாய் இருக்கிறது ; அவளது தனிமனித ஆசைகளையும் கனவுகளையும் உண்டு தழைப்பதாய் அது அமைகிறது . அன்பின் பெயரால் தியாகிக்கப் பட்ட அந்த விருப்பங்கள் எரியும் வெப்பத்தில் வாடும் தனி ஒருத்தியின் வேதனை , பெரும்பாலும் சாட்சிகள் ஏதுமின்றி மௌனமாக உருகிக் கரைகிறது . எட்டிவிடும் தூரத்தில் இருந்த சாத்தியங்கள் பல எட்ட முடியாத ஊமைக் கனவுகளாய் ரசவாதம் செய்யப்பட்டு கழிவிரக்கம் பீறிடும் உறக்கம் தீண்டாத இரவுகளுக்கென தாரை வார்க்கப்பட்டு விடுகின்றன . ஆக அன்பை முன்னிருத்தி நிகழ்த்த படும் கருணைக் கொலைகள் உண்டு பல கோடி . கடவாத தூரங்களுக்கு மற்றொரு பொறுப்பாளியான மன்னிப்பும் அன்பின் பெயராலேயே இயங்கி வருகிறது . வழங்கப் பட்ட சில மணிகளிளேயே அதன் மகத்துவத்தை தொலைத்து