ஊழிக்காலக் கூத்திற்கான ஒரு ரகசிய ஒத்திகை
"அன்பே அறம்; அதுவே சிவம்" என்ற ரீதியிலான சாத்வீகத் தளைகளை தளர்த்தி, அரிதாரங்கள் தவிர்த்து, யதார்த்தத்தை தேடும் பொழுதுகளில் தென்படுகிறது வாழ்வின் பல கடந்து வராத தூரங்களையும்.
அன்பெனும் வேள்வி, பெண்ணாக பிறந்தவளிடம் மகத்தான பலிகளை கேட்பதாய் இருக்கிறது; அவளது தனிமனித ஆசைகளையும் கனவுகளையும் உண்டு தழைப்பதாய் அது அமைகிறது.
அன்பின் பெயரால் தியாகிக்கப் பட்ட அந்த விருப்பங்கள் எரியும் வெப்பத்தில் வாடும் தனி ஒருத்தியின் வேதனை, பெரும்பாலும் சாட்சிகள் ஏதுமின்றி மௌனமாக உருகிக் கரைகிறது.
எட்டிவிடும் தூரத்தில் இருந்த சாத்தியங்கள் பல எட்ட முடியாத ஊமைக் கனவுகளாய் ரசவாதம் செய்யப்பட்டு கழிவிரக்கம் பீறிடும் உறக்கம் தீண்டாத இரவுகளுக்கென தாரை வார்க்கப்பட்டு விடுகின்றன.
ஆக அன்பை முன்னிருத்தி நிகழ்த்த படும் கருணைக் கொலைகள் உண்டு பல கோடி.
கடவாத தூரங்களுக்கு மற்றொரு பொறுப்பாளியான மன்னிப்பும் அன்பின் பெயராலேயே இயங்கி வருகிறது.
வழங்கப் பட்ட சில மணிகளிளேயே அதன் மகத்துவத்தை தொலைத்து விடுவதே மன்னிப்பின் பிறவிக் குணமாய் அமைகிறது. மன்னித்தவளின் பெருந்தன்மை 'பொறையுடைமையே பெண்ணுக்கழகு' என்னும் அலங்கார போர்வையில் முடப்பட்டு விடுகிறது - சிலப்பதிகார காலங்கள் தொட்டு.
பிழை செய்யும் கோவலனையும் மன்னித்து அவன் அணைவில் பிணைவுண்ட கண்ணகியின் மெய்யான ஆற்றல் வெளிப்பட்டதோ அன்பின் அணைகளால் தடுக்கப்படாத ஓர் ஆவேசப் பொழுதில். ஒரு நகரத்தை எரித்தது குறித்த தார்மீக தர்க்கங்களை தவிர்த்து இந்நிகழ்வை நோக்கையில், காலங்கள் பலவாய் அடக்கப்பட்ட, அங்கீகாரம் மறுக்கப்பட்ட, ஒரு பேதையின் உள்ளத்து உருத்திர ப்ரவாகம் ஓங்கிப் பெருகி ஒருவழியாக ஒரு வடிகாலை அடைந்த மோட்சத் தருணமாக அது அமைந்தது விளங்கும்.
கண்ணகி போன்றே கற்பில் சிறந்தவள் ஆயினும் வெகுண்டு எழாத மாதவிக்கு இங்கே கோயில்கள் இல்லை. ஓரு வேளை கண்ணகிக்கான வழிபாட்டின் சூட்சுமம் அவள் பெற்ற விடுதலை நொடிகளை கொண்டாடும், நிறைவேறாத பல பெண்களின் கனவுகள் எறிந்த பெருமூச்சுக்களின் ஆங்கார அனலை தணிக்கும் ஆதி கால ஏற்பாடோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
"வந்தால் மலை, போனால் முடி" என குழப்பங்களும், சுயமறுதலிப்புகளும் மறுக்கப்படும், மறக்கப்படும் அந்த சில நொடிகளில் இரைந்து கிடக்கும் "கறாரான தேர்வுக்கான" வாய்ப்புகளில் கிடைக்கப் பெறுகிறது விளைவுகளை எண்ணி மயங்காத ஒரு விழிப்பு நிலை. அந்த நிலையில் கடக்கப்படும் தூரங்களில் இருந்து மீண்டு திரும்புதலின் சாத்தியங்களை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
இங்கே அப்படி ஒரு மோட்ச நிலை பல பெண்களுக்கு கிடைக்கப் பெறாத ஊதியமாகவே முடங்கிவிடுகிறது, 'அன்பு' மற்றும் 'கடமை' ஆகிய பெரும்பெயர்களால்.
என்றாலும், எய்தக்கூடிய பேருயரங்களை தெரிந்தே தவிர்த்தவளாய், தொலைத்தவளாய் நிற்கும் எனக்குள்ளும், யாருக்கும் தெரியாமல் நிகழ்கிறது - என் அளவில், என் மனத்திரையில் - ஊழிக்காலக் கூத்திற்கான ஒரு ரகசிய ஒத்திகை. அதன் பிம்பங்களை உண்டு, மறுதலிக்கப்பட்ட தூரப் பயணங்களின் கற்பனைகளில் சிறிதே இளைப்பாறிக் கொள்வதால் இன்னும் அலுப்படையாமல் பொறை காத்து நிற்கிறேன் நான்.
இப்படிக்கு,
கனவுகளை எரித்து கதை வரையும் ஒருத்தி.
Comments
Post a Comment