ஊழிக்காலக் கூத்திற்கான ஒரு ரகசிய ஒத்திகை
" அன்பே அறம் ; அதுவே சிவம் " என்ற ரீதியிலான சாத்வீகத் தளைகளை தளர்த்தி , அரிதாரங்கள் தவிர்த்து , யதார்த்தத்தை தேடும் பொழுதுகளில் தென்படுகிறது வாழ்வின் பல கடந்து வராத தூரங்களையும் . அன்பெனும் வேள்வி , பெண்ணாக பிறந்தவளிடம் மகத்தான பலிகளை கேட்பதாய் இருக்கிறது ; அவளது தனிமனித ஆசைகளையும் கனவுகளையும் உண்டு தழைப்பதாய் அது அமைகிறது . அன்பின் பெயரால் தியாகிக்கப் பட்ட அந்த விருப்பங்கள் எரியும் வெப்பத்தில் வாடும் தனி ஒருத்தியின் வேதனை , பெரும்பாலும் சாட்சிகள் ஏதுமின்றி மௌனமாக உருகிக் கரைகிறது . எட்டிவிடும் தூரத்தில் இருந்த சாத்தியங்கள் பல எட்ட முடியாத ஊமைக் கனவுகளாய் ரசவாதம் செய்யப்பட்டு கழிவிரக்கம் பீறிடும் உறக்கம் தீண்டாத இரவுகளுக்கென தாரை வார்க்கப்பட்டு விடுகின்றன . ஆக அன்பை முன்னிருத்தி நிகழ்த்த படும் கருணைக் கொலைகள் உண்டு பல கோடி . கடவாத தூரங்களுக்கு மற்றொரு பொறுப்பாளியான மன்னிப்பும் அன்பின் பெயராலேயே இயங்கி வருகிறது . வழங்கப் பட்ட சில மணிகளிளேயே அதன் மகத்துவத்தை தொலைத்து ...